‘ஆர்வம்’ அகாடமி சிபி குமரன் வழிகாட்டுதலில் தேர்ச்சி பெற்ற ஐஆர்எஸ் பூரணசுந்தரி அனுபவ உரை
அண்ணா நகரில் செயல்பட்டு வருகின்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் நடைபெற்றது. இத்தேர்வின் சமீபத்திய வெற்றியாளரும், இந்திய வருவாய்ப்பணி உதவி ஆணையருமான பூரணசுந்தரி ஐஆர்எஸ் கலந்து கொண்டு தேர்வர்களுக்கு வழிகாட்டிப் பேசினார். எனது வெற்றிக்குக் காரணம் சிபிகுமரன் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசியதாவது:
‘‘இந்தியக் குடிமைப் பணித்தேர்வு என்பது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளைக் கொண்டது. அதனால் தேர்வர்கள் பாடப் பகுதியிலோ, நாளிதழ்களிலோ செய்தி ஒன்றினைப் படிக்கின்றபோது மூன்று நிலைகளுக்கும் தொடர்பு படுத்தி படித்தல் வேண்டும்.
இந்தத் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் எஸ்.எஸ்.சி., ரெயில்வே, வங்கிப் பணிகள் போன்ற அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகளையும், தமிழ் நாடு மாநிலப் பணிகளுக்கான தேர்வுகளையும் தொடர்ந்து எழுதிட வேண்டும்.
எனது முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்விலேயே நான் தேர்ச்சி பெறவில்லை. 2 மற்றும் 3வது முயற்சியில் நேர்முகத் தேர்வு வரை சென்றேன். எனது முயற்சியில் ஒரு போதும் நான் சோர்வடைந்ததில்லை. எனது போட்டித் தேர்வுக்கான பயணம் இன்னும் தொடர்கிறது.
எனது வெற்றி போட்டித் தேர்வு எழுதுகின்ற எல்லோருக்கும் ஒரு ஊக்க சக்தியாக இருக்கிறது என பலரும் பாராட்டினர். இந்த இலட்சிய இலக்கினை நோக்கி நம்பிக்கையோடு முயற்சி செய்கின்றவர்கள் நிச்சயம் வெற்றி பெறலாம்.
நல்ல வழிகாட்டுதல் என்பது இந்தியக் குடிமைப் பணித்தேர்வின் வெற்றியை விரைந்து பெறுவதற்கு உதவுமென்றே நான் கருதுகிறேன். எனது வெற்றியிலும் வழிகாட்டுதல் சிறந்த பங்கினைப் பெற்றுள்ளது.
நம்பகமான வழிகாட்டி
குடிமைப் பணித்தேர்வில் எனது வெற்றியில் அக்கறை கொண்ட சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர் சிபிகுமரன் ஆவார். இந்தியக் குடிமைப் பணித்தேர்வில் தமிழ் விருப்பப் பாடம் மற்றும் தமிழ் வழியில் தேர்வு எழுதுகின்ற தேர்வர்களுக்கு சிபிகுமரன் வெற்றிகரமான நம்பகமான வழிகாட்டி ஆவார்.
எளிய பின்னணியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த நான், இத்தேர்வில் வெற்றி பெற பலரும் உறுதுணையாக நின்றுள்ளனர். தேர்வர்களாகிய உங்களின் முயற்சி உண்மையானதாக இருந்தால் உதவியும், வெற்றியும் உங்களைத் தேடி வரும் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு.
குடிமைப் பணித் தேர்வுக்கான சிபிகுமரனின் நூல்கள் தேர்வர்களுக்கான சிறந்த ஆதார நூல்களாக விளங்குகின்றன.
தவம் போல…
ஆதார நூல்களைப் படியுங்கள். நாளிதழ்களைப் படியுங்கள். முந்தைய தேர்வு வினாக்களை பயிற்சி செய்யுங்கள். எழுத்துப் பயிற்சியினை ஒரு தவம்போல மேற்கொள்ளுங்கள். இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் சாதனை நிகழ்த்தலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தேசிய பார்வையற்றோருக்கான சங்கம், தமிழ்நாடு கிளையின் பொதுச் செயலாளர் எம்.எழில், செயலாளர் பி.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
100க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். தேர்வர்களுக்கு மு.சிபிகுமரன் எழுதிய ‘நாளை நான் ஐஏஎஸ்’ என்னும் வழிகாட்டி நூலினை பூரண சுந்தரி வழங்கினார். நிகழ்ச்சியை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கவுதம் விஸ்வபாரதி, தலைமைப் பயிற்சியாளர் நந்தக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.